முகநூல் விருப்பம்

முகப்பு

குரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017

பதிவு நாள் June 18, 2016

 
 
முழு முதல் சுப கிரககமான ஸ்ரீ குரு பகவான் மங்களகரமான துர்முகி வருடம் ஆடி மாதம் 18 ம் தேதி [ 2-8-2016 ] அன்று செவ்வாய் கிழமை காலை மணி 09.27 க்கு சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பிரவேசம் ஆகின்றார்..


 
கன்னி ராசியில் 1-6-2017 வரை சஞ்சரித்து பின் மாலை 4-24 PM க்கு துலாம் ராசிக்குள் பிரவேசிப்பார்.
 
 
கோச்சாரக் குருவினால் நல்ல பலன்கள் கிடைக்கும் ஐந்து இடங்கள்


 
இரண்டாம் வீட்டில்: பணவரவுகள்.


ஐந்தாம் வீட்டில்:  பண லாபங்கள், புத்திர பாக்கியம், புத்திர லாபம், பெண் சுகம்.
ஏழாம் வீட்டில்: மதிப்பு மரியாதை, செல்வாக்கு கிடைக்கும் காலம். பண வரவுகள் அதிகரிக்கும் காலம்.
ஒன்பதாம் வீட்டில்: மனைவி மக்கள் சுகம், தனலாபம், எடுத்துச் செய்யும் செயல்களில் வெற்றி கிட்டும் காலம்


 
பதினொன்றாம் வீட்டில்: மகிழ்ச்சியான காலம். நினைத்தது நிறைவேறும் இந்த ஓராண்டு சஞ்சாரத்தில்!


 
தொடர்ந்து படிக்கும் முன் நினைவில் கொள்க...


 
இந்தக் கோச்சாரப் பலன்கள் எல்லாம் நல்ல தசாபுத்திகள் நடந்தால் மட்டும் தான் கிடைக்கும்.


 
அதே போல குரு சுயவர்க்கத்தில் குறிப்பிட்ட ராசிக் கட்டத்தில்  உள்ள தனது பரல்களை வைத்துத்தான் பலன் கொடுப்பார்.
அவருக்கு சுய வர்க்கத்தில் எட்டுப் பரல்கள் இருந்தாலும், சுற்றி வரும் இடத்தில் தன்னுடைய கட்டத்தில் உள்ள பரல்களுக்குத் தக்கபடி தான் பலன் தருவார்.
பொதுவாக குரு,...... 5ஆம் இடம், 7ஆம் இடம், 9ஆம் இடம் மற்றும் 11ம் ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் திருமணம் தடைப்பட்டிருந்தவர்களுக்கு திருமணத்தை நடத்தி வைப்பார்.
குழந்தை பேறுக்காக காத்திருந்தவர்களுக்கு குழந்தையைத் தருவார். இடம், வீடு வாங்க காத்திருந்தவர்களுக்கு அந்த வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பார்.


 
 கோச்சாரக் குருவினால் நல்ல பலன்கள் கிடைக்காத ஏழு இடங்கள்.


 
முதல் வீட்டில்: சாதகம் இல்லாத சூழ்நிலைகள் உள்ள காலம் ....... நிலைத் தடுமாற்றங்கள். வாக்குவாதம், கலகங்கள், மந்தமான போக்குகள் உள்ள காலம் இந்த ஒராண்டு காலம்


 
மூன்றாம் வீட்டில்: மனம் மற்றும் உடல் நலக் குறைவுகள், பதவி நீக்கம் அல்லது பதவி மாற்றம், துன்பங்கள்
நான்காம் வீட்டில்: உறவுகள் மூலம் துன்பங்கள். சுகமின்மை
ஆறாம் வீட்டில்: சுகக்குறைவுகள்
எட்டாம் வீட்டில்:துக்கம், மரணத்திற்குச் சமமான கஷ்டங்கள்
பத்தாம் வீட்டில்: பதவி துறத்தல் அல்லது பதவியில் இடம், ஊர் மாற்றம், பண நஷ்டங்கள்.


 
பன்னிரெண்டாம் வீட்டில்: துக்கம், தூர தேசம் போய் வருதல் அல்லது தொலைவான இடம் சென்று வசித்தல், தன விரையம், நிலை மாற்றம் போன்றவை இருக்கும் இந்த ஓராண்டு காலத்தில்.
 
பொது பலன்கள் கீழே .....


 
இவை எல்லாம் ஜனன கால தசா புத்திகளின் இருப்பை  பொருத்து மாறுபடும் .......
நல்ல தசா புத்தி நடந்தாலும், அஷ்டக வர்க்கத்தில் நல்ல பரல்களை கொண்டிருந்தாலும் பலன்கள் வேறுபடும் என்பதை நினைவில் கொண்டு மேலே தொடரவும்.
 
 
மேஷ ராசிக்காரர்களுக்கு  6 ம் இடத்து குரு (சத்ரு குரு) – பலன் 50% -
அவ்வளவு சிறப்பானதல்ல. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பிரச்சினைகளை தருவார். தேவை இல்லாத விசயங்களில் மூக்கை நுழைப்பது கூடாது. அடுத்தவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்க்கவும். பதவி உயர்வு , சம்பள உயர்வு தடைபடும். வேலைப் பளு கூடும். சுய தொழில் செய்பவர்களுக்கு சோதனையான காலம். பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்து, புதிய வாடிக்கையாளர்களிடம்  கவனமாக இருக்கவும். தம்பதியர்க்கு அன்னியோன்யம் குறைபடும். சிலருக்கு தொழில் / வேலை சம்பந்தமாக இடம் மாறும் சூழ்நிலை ஏற்படும். கடன் வாங்குவதும் கொடுப்பதும் தவிர்ப்பது நல்லது.
ஆவணி மற்றும் ஐப்பசி மாதங்கள் மிகவும் சோதனையான கால கட்டங்களாகும்.
குரு பார்க்கும் இடங்கள்:
5 ம் பார்வையாக 10 ம் இடம், செய்தொழில் போராட்டம் இருக்கும். புதிய தொழில் அமைந்து அதில் பல இடர்பாடுகளை தரும்.
7 ம் பார்வையாக 12 ம் இடம்..... ஆலய வழிபாடு அதிகரிக்கும். சுபச்செலவுகள் அதிகரிக்கும்.
9 ம் பார்வையாக 2 ம் இடம்..... சுபச்செலவுகள் கூடும். வரவுக்கு செலவு சரியாக இருக்கும்.
 
பரிகாரம்: ஆலங்குடிக்குச் சென்று குரு பகவானை தரிசிக்கவும்.
 =========================================


 
ரிஷப ராசிக்காரர்களுக்கு  5 ம் இடத்து குரு (பூர்வ புண்ய குரு) – பலன் 70% -  
அற்புதமான பூர்வ புண்ணிய பலன்களை வாரி வழங்க இருக்கிறார். திடீர் பண வரவு உண்டாகும். வேலை மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட அபிலாசைகள் நிறைவேறும் காலம் இது. வெளிநாட்டு தொடர்புகளால் நன்மை உண்டு. மேற்படிப்புக்கு உகந்த காலம். உடன் பிறந்தோர் உறவு சிறக்கும். புனித யாத்திரை மேற்கொள்ளுதல், கும்பாபிஷேகத்தில் பங்கேற்றல் போன்ற சுபங்கள் நிகழும் காலம். திருமணத்திற்கு உகந்த காலம். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிரிகள் பணிவர். அதிக உழைப்பு அதிக வருமானம். உஷ்ணம் மற்றும் தோல் சம்பந்தமான உபாதைகள்  வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. தொழில் விஸ்தரிப்பு உண்டு.


 
 குரு பார்க்கும் இடங்கள்: 5 ம் பார்வையாக 9 ம் இடம் – தந்தை வழி அன்பும் ஆதரவும் இருக்கும்.
7 ம் பார்வையாக 11 ம் இடம் – தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
9 ம் பார்வையாக - ராசியைப் பார்ப்பதால் எல்லா விசயங்களும் உங்களுக்கு சாதகமாக அமையக் கூடும். பதவி உயர்வும் சம்பள உயர்வும் எதிர்பார்த்தது போல அமையும். வெளிநாட்டில் கல்வி மற்றும் வேலை முயற்சி செய்பவர்களுக்கு வெற்றி தரும் காலம். குடும்பத்தில் குதூகலம் நிலவும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும்.
நற்பலன்கள் கூட பரிகாரம்: தென்குடித் திட்டை சென்று குரு பகவானை தரிசிக்கவும்.
 ======================================


 
மிதுன ராசிக்காரர்களுக்கு  4ம் இடத்து குரு (அர்த்தாஷ்டம குரு) – பலன் 50% -
சென்ற குரு பெயர்ச்சியை விட இந்த குரு பெயர்ச்சி நன்மை தரும். உறவினர் வகையில் வீண் பகை. உறவினர்களால் தொல்லை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாயார் சுகமின்மை. திருமணம் போன்ற சுப நகழ்ச்சிகள் தடைபடும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் இல்லை. வேலையில் மேலதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. தொழில் சம்பந்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க நேரலாம். ஆடம்பரத்தைத் தவிர்க்கவும். தேவைகளைக் குறைத்துக் கொள்ளவும். கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். கணவரின் அன்பு இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பொருள் திருடு போக வாய்ப்பு உண்டு. கண் / வயிறு உபாதை வரும். பயணத்தில் கவனம் தேவை. வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்யலாம். புதிய தொழில் தொடங்க வாய்ப்புகள் தேடி வரும். கடன் பெற்று தொழிலை விரிவுபடுத்தலாம்.
3 ல் உள்ள ராகுவும், 6 ல் உள்ள சனியும் பிரச்சினைகளுக்கு தீர்வு தருவார்கள்.


 
குரு பார்க்கும் இடங்கள்: 5 ம் பார்வையாக 8 ம் இடம் – உங்களை அவமானப்படுத்தியவர்கள் தேடி வந்து நட்பு பாராட்டுவார்கள்.
7 ம் பார்வையாக 10 ம் இடம் – தொழிலில் முன்னேற்றம். வேலை தேடுவோருக்கு வேலை வாய்ப்பு.
9 ம் பார்வையாக 12 ம் இடம் – தெய்வ நம்பிக்கை, கோவில் வழிபாடு அதிகரிக்கும். ஆன்மீக யாத்திரை உண்டு.
பரிகாரம்: தக்கோலம் சென்று குரு பகவானை தரிசிக்கவும்.


 

==================================================================


கடக ராசிக்காரர்களுக்கு  3 ம் இடத்து குரு (தைரிய குரு) – பலன் 40% -
சுணக்கம் தரும் காலம்.
“ தீதிலாதொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டது “ என்பது ஜோதிட வாக்கு.
புதிய மற்றும் பெரிய முயற்ச்சிகளை தள்ளி போடுவது நல்லது. பணம் மற்றும் சொத்து விவகாரங்களில் எந்த பெரிய முடிவும் எடுக்காமல் இருப்பது நல்லது. நீதிமன்ற வழக்குகளில் சிக்காமல் பார்த்து கொள்ளுதல் நல்லது. வேலை ஆட்களுக்கு இட மாற்றமும் ஊதிய உயர்வுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனால் வேலை பளு அதிகரிக்கும்.
ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. தம்பதியர் இடையே வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. எல்லாவற்றிலும் பொறுமை அவசியம். ரத்தம் சம்பத்தப்பட்ட நோய்களில் கவனம் தேவை. வாகனம் ஓட்டும் பொழுது கவனம் தேவை.
 
குரு பார்க்கும் இடங்கள்:
5 ம் பார்வையாக 7 ம் இடம் – புதிய மனிதர்கள் நட்பு ஏற்படும். கணவன், மனைவி வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
7 ம் பார்வையாக 9 ம் இடம் – புனித யாத்திரைகள், ஆன்மீக பயணம். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி.
9 ம் பார்வையாக 11 ம் இடம் – செய்தொழிழில் லாபம் அதிகரிக்கும்.
 
பரிகாரம்: இலம்பயங்கோட்டூர் சென்று குரு பகவானை தரிசிக்கவும்.
 ======================================


சிம்ம ராசிக்காரர்களுக்கு   2 ம் இடத்து குரு (குடும்ப குரு) – பலன் 90%
 
 உங்களுக்கு நன்மைகளை வாரி வழங்கப் போகிறார். பண வரவு / பண புழக்கம் அபரிதமாக இருக்கும். புதிய வேலை, தொழில் முயற்ச்சிகள் நன்றாக கை கூடும். திருமணத்திற்கு உகந்த காலம். நாள் பட்ட நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். நீண்ட கால கனவுகள் மற்றும் இலட்சியங்கள் நிறைவேறும் காலம்.
செய்தொழில் சுணக்கம் மாறும். தொழில் விஸ்தரிப்புக்கான எல்லா முயற்ச்சிகளும் வெற்றி அடையும். தொழில் விருத்திக்கான புதுப்புது யோசனைகள் தோன்றும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும். பதவி உயர்வு உண்டு. விரும்பிய இடத்திற்கு இட மாறுதல் உண்டு. எல்லோரிடத்திலும் நன் மதிப்பும், நல்ல மரியாதையும் பெறுவீர்கள். புது வீடு, வாகனம், ஆபரணம் வாங்கும் யோகம் உண்டு. மக்கட்பேறு சிறக்கும். பகை விலகும். எதிரிகள் நண்பர் ஆவர்.
ஜீரண உறுப்பு கோளாறுகளில் கவனம் தேவை. வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது. தொட்டதெல்லாம் பொன் ஆகும் காலமிது. கலைஞர்கள், அரசியல்வாதிகள் சாதனை படைப்பார்கள்.
 
குரு பார்க்கும் இடங்கள்:
5 ம் பார்வையாக 6 ம் இடம் – கடன்கள் தீரும். நோய்கள் அகலும். எதிரிகளின் தொல்லை இருக்காது.
7 ம் பார்வையாக 8 ம் இடம் – வங்கி இருப்பு, ரொக்கம் கூடும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும்.
9 ம் பார்வையாக 10 ம் இடம் – வேலை மற்றும் தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். தொழில் ரீதியாக பெரிய முன்னேற்றம் தரும். வேலை இல்லாதவர்க்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும்.
பரிகாரம்: திருப்புலிவனம் சென்று குரு பகவானை தரிசிக்கவும்.
 
=======================================


கன்னி ராசிக்காரர்களுக்கு  1 ம் இடம் (ஜென்ம குரு) – பலன் 50%
 
 குடும்பம், தொழில் ரீதியாக சில பிரச்சினைகள் தோன்றி அவற்றை சமாளிக்க போராட வேண்டி இருக்கும். முக்கிய விசயங்களில் முடிவெடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும்.
அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். பணப்பிரட்ச்சினைகளை கடன் வாங்கி சமாளிக்க வேண்டி இருக்கும். கல்வி சிறக்காது. தொழிலில் மந்த நிலை ஏற்படும்.
உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பது சிரமம். கணவன் மனைவி இடையே அன்யோன்ய குறைவு. வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. படிக்கும் மாணவ மாணவியர்க்கு மிகவும் சவாலான காலம் இது. பொதுவாக கலகம், மற்றும் விரோதம் வரும் காலம். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். இனம் புரியாத பயம் ஆட்கொள்ளும்.
உணவு உட்கொள்ளும் வகைகளில் கவனம் தேவை. வயிறு சம்பத்தப்பட்ட வியாதிகள் வர வாய்ப்பு உண்டு. கண் நோய் வரலாம். எதிலும் விட்டுக்கொடுத்து போவது நல்லது. அந்நிய நாட்டுத் தொடர்பு, அயல் நாட்டு பயணம் சிறக்கும். வெளிநாடு / வெளியூர்களில் வேலை தேடி வருவோர்களுக்கு காரியம் கைகூடும்.
குரு பார்க்கும் இடங்கள்:
5ம் பார்வையாக 5 ம் இடம் பார்வை செய்வதால் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். குலதெய்வ அனுக்ரகம் உண்டு. பூர்வீக சொத்திலிருந்து வரும் வருமானம் அதிகரிக்கும்.


 
7 ம் பார்வையாக 7 ம் இடம் – குடும்பம் / கூட்டுதொழிலில் உள்ள பிரட்ச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். புதிய நண்பர்கள் / கூட்டாளிகள் அறிமுகம் ஆவார்கள்.
9 ம் பார்வையாக 9 ம் இடம் – தந்தையுடன் சுமுகமான உறவு. வெளிநாட்டு தொழில் / வேலை தொடர்பான முயற்ச்சிகள் வெற்றியைக் கொடுக்கும்.
பரிகாரம்: சென்னை பாடியில் உள்ள குருபகவானை தரிசிக்கவும்.


 
துலாம் ராசிக்காரர்களுக்கு  12 ம் இடத்து குரு (விரய குரு) – பலன் 60% -
விரயம் பெரிய அளவிலும், நன்மை சிறிய அளவிலும் அமையும். கடன் பெற்று சுப காரியங்கள் செய்யும் நேரம். வெளியூர் / வெளி நாட்டுப் பிரயாணம் திருப்த்திகரமாக அமையும். புண்ணிய ஷேத்திராடன பாக்கியம் உண்டு. உடல் நலம் சற்று மேம்படும். ஆனால் உஷ்ணம் சம்பத்தப்பட்ட நோய்க்கு வாய்ப்புண்டு.
தாயாரின் உடல்நிலை கட்டுக்குள் இருக்கும். வேலைப்பளு கூடும். மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகமாக இருக்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் பிரச்சினைகளை சந்திக்கும் கால கட்டம்.
பொருள் நாசம் ஏற்படும். பொருள் திருடு போகும் அபாயம் உண்டு. புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி குடும்பத்தாருடன் சுமுக உறவு இருக்காது. பொருளாதார நிலை ஏற்றம் இறக்கமாக இருக்கும். தேவையில்லாத பிரச்சினைகள் தேடி வரும். படிக்கும் பிள்ளைகளுக்கு மறதி அதிகமாகும். வேலை இல்லாதவர்களுக்கு தை, மற்றும் மாசி மாதத்தில் நல்ல வேலை அமையும். வெளி நாட்டு தொடர்பான வேலை / படிப்பு விஷயங்களில் லாபம் உண்டு.


 
குரு பார்க்கும் இடங்கள்: 5 ம் பார்வையாக 4 ம் இடம் – நிலம் / வீடு விற்பதாக இருந்தால் நல்ல விலைக்கு விற்க முடியும்.
7 ம் பார்வையாக 6 ம் இடம் – கடன், நோய், எதிரிகள் தொல்லை ஓரளவு கட்டுக்குள் இருக்கும்.
9 ம் பார்வையாக 8 ம் இடம் – வங்கி இருப்பில் மாற்றங்கள் வரும். அலைச்சல் அதிகமாகும். எளிதாக முடிய வேண்டிய காரியங்கள் கூட சிரமத்தின் பேரில் முடிக்க வேண்டி வரும்.
 
பரிகாரம்: சுருட்டப்பள்ளி குரு பகவானை தரிசிக்கவும்.
 =====================================


 
விருட்சிக ராசிக்காரர்களுக்கு  11 ம் இடத்து குரு (சுப லாப குரு) – பலன் 95%
 பொன்னான வாய்ப்புகளை அள்ளி வழங்கும் காலம். அத்தியாவசிய மற்றும் ஆடம்பர தேவைகள் அனைத்தும் நிறைவேறும். பொருளாதாரம் கணிசமான அளவில் உயரும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தடை பட்ட திருமணம் இனிதாக நிறைவேறும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும். தொழிலில் செய்த தவறுகளை சரி செய்து முன்னேற்றம் காண்பீர்கள். தொழில் வளர்ச்சி அபரிதமாக இருக்கும். தாரள பணப்புழக்கம் உண்டு. வெளிநாட்டு வேலைக்கான யோகம் உண்டு. எதிர்பாராத பதவி உயர்வு நிச்சயம். புதுமனை புகுவீர்கள். குழந்தை பாக்கியம் ஏற்படும். நண்பர்கள், உறவினர்கள் உதவி தாராளமாக கிடைக்கும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். தெய்வ அனுகூலம் உண்டு. அரசு வகை விசயங்களில் அனுசரித்து போவது நல்லது. நெருப்பு சம்பந்தப்பட்ட வேலை / விசயங்களில் கவனம் தேவை.


 
 குரு பார்க்கும் இடங்கள்: 5 ம் பார்வையாக 3 ம் இடம் – தைரியம் வீரியம் தன்னம்பிக்கை கூடும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும்.
7 ம் பார்வையாக 5 ம் இடம் – எதையும் சிந்தித்து செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். புலனாயும் நுண்ணறிவு வலுப்பெறும்.
9 ம் பார்வையாக 7 ம் இடம் – மனைவி / தொழில் கூட்டாளிகள் / நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கூட்டு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
 
பரிகாரம்: புளியரை சென்று (தென்காசிக்கு அருகில்) குரு பகவானை தரிசிக்கவும்.
 
======================================


தனுசு ராசிக்காரர்களுக்கு  10 ம் இடத்து குரு (ஜீவன குரு) – பலன் 55%
 பதவியை கெடுக்கும். தொழில் செய்யும் இடம் மாற்றம் உண்டாகும். தொழிலில் இடர்பாடுகளை, தடைகளை உருவாக்குவார். நன்மையான பலன்களை எதிர்பார்ப்பது ஆகாது.
வேலை பளு கூடும். வியாதிகள் கட்டுக்குள் இருக்கும். புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைக்கும் நிலை ஏற்ப்படும். எதிரிகள் பின் வாங்குவார்கள். வீண் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரம் மந்த கதியில் இருக்கும். சரக்கு விற்காமல் தேங்கும். புதிய வாடிக்கையாளர்களை கவர்வது எளிதல்ல.
கணவன் மனைவி ஒற்றுமை சீராக இருக்கும். விவசாயக் கடன் கூடும். தேவையில்லாத வெளியூர் பயணம்  ஏற்படும். அனாவசிய செலவுகள் அதிகரிக்கும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். திருமணம் தாமதம் ஆகும். பித்தம் சம்பந்தப்பட்ட நோய் ஏற்படும். வெளி இடங்களில் உணவு அருந்துவதை தவிர்ப்பது நல்லது.
 
குரு பார்க்கும் இடங்கள்: 5 ம் பார்வையாக 2 ம் இடம் – தேவைக்கேற்ற தன வரவு இருக்கும். உங்கள் பேச்சுக்கு சமுதாயத்தில் மரியாதை இருக்கும்.
7 ம் பார்வையாக 4 ம் இடம் – உடல் நலம் மேம்படும். நிலம் மற்றும் கட்டிடம் சார்ந்த வகைகளில் வருமானம் அதிகரிக்கும்.
9 ம் பார்வையாக 6 ம் இடம் – கடன், நோய், எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் குரு பார்வையால் நிவர்த்தி அடையும்.
 
பரிகாரம்: உத்தமர்கோவில் சென்று குரு பகவானை தரிசிக்கவும்.
 
=====================================


மகர ராசிக்காரர்களுக்கு  9 ம் இடத்து குரு (பாக்ய குரு) – பலன் 90%
 நல்ல பலன்களை வாரி வழங்குவார். உடல், மனம், குடும்பம், தொழில், கல்வி சிறக்கும். தன வரவு நன்றாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்சினைகள் ஒரு நல்ல முடிவுக்கு வந்து முன்னோர் சொத்து கைக்கு வந்து சேரும். உயர் பதவி நல்ல சம்பளத்துடன் தேடி வரும். திருமணம் கை கூடி வரும். புத்திர பாக்கியம் சிறக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வரும் பாக்கியம் உண்டு. வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டு. வயிற்றில் இருந்த நோய் தீரும். தொழில் விருத்தி ஏற்படும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும். பெற்றோர் ஆரோக்கியம் மேம்படும். மருத்துவ செலவு குறையும். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வெளிநாட்டு தொடர்பு வர்த்தகம் நன்றாக இருக்கும். அயல்நாட்டு வேலை வாய்ப்பு உண்டு.
குரு பார்க்கும் இடங்கள்: 5 ம் பார்வையாக உங்கள் ராசியை பார்க்க, மனம் தெளிவு உண்டாகும்.
7 ம் பார்வையாக 2 ம் இடத்தை பார்ப்பதால் புதிய தொழில் முயற்ச்சிகள் வெற்றியை தரும். பணப்புழக்கம் உண்டாகும்.
9 ம் பார்வையாக 5 ம் இடத்தை பார்வை செய்வதால் குல தெய்வத்தின் அருளும் ஆசியும் பரிபூரணமாக கிட்டும்.
 
பரிகாரம்: கோவிந்தவாடி அகரம் சென்று குரு பகவானை தரிசிக்கவும்.
 
 =========================================


 
கும்ப ராசிக்காரர்களுக்கு    8 ம் இடத்து அஷ்டம குரு – பலன் 35%
- அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் குரு என்பது ஜோதிடத்தில் பழமொழி. எல்லா விசயங்களிலும் தடைகளையும், தாமதங்களையும் உருவாக்குவார். உடல் நலத்தில் மிகுந்த கவனம் தேவை. குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தலை தூக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிணக்கு உண்டாகும். தொழிலில் புதிய முயற்ச்சிகள் தோல்வியை தரும். வேலை பளு அதிகாரிக்கும். எதிர்பார்த்த சம்பள உயர்வும் பதவி உயர்வும் தள்ளி போகும். கணவன் மனைவி இடையே கருத்து ஒற்றுமை இராது. பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். தரம் தாழ்ந்தவர்களின் சேர்கையால் அவப்பெயர் எடுக்க நேரிடலாம். அலைச்சல் அதிகரிக்கும். புதிதாக பழகும் நபர்களிடம் கவனம் தேவை. எதிலும் விட்டுகொடுத்து போவது நல்லது. உஷ்ணம், பித்தம், மயக்கம், சளி, ஜீரண உறுப்புகள் பாதிப்பு போன்ற உடல் உபாதைகள் வரலாம்.
பகைவர்கள், எதிரிகள் பலம் பெரும் காலம். எதிலும் எச்சரிக்கை தேவை. வீடு மாறும் சூழ்நிலை உருவாகும். கொடுத்த கடன் திரும்பி வருவது கடினம். கடன் வாங்கினாலும் திரும்ப கொடுப்பது கடினம். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவதை தவிர்ப்பது நல்லது. திருமணம் தடைப்படும்.
 
குரு பார்க்கும் இடங்கள்: 5 ம் பார்வையாக 12 ம் இடம் – சுபச்செலவுகளில் பணம் கரையும். வெளியூர், வெளிநாடு சென்று பனி புரியும்/ படிக்கும் யோகம் உண்டு.
7 ம் பார்வையாக 2 ம் இடம் – பணப்புலக்கத்திற்க்கு குறைவிருக்காது. ஆனால் சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவ பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.
9 ம் பார்வையாக 4 ம் இடம் – வீடு மனை நிலம் அசையா சொத்துக்களின் வகையில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக அகன்று அதிலிருந்து ஓரளவு வருமானம் உண்டு.
 
பரிகாரம்: திருவொற்றியூர் குரு பகவானை வழிபடவும்.
 
 =======================================


 
 மீன ராசிக்காரர்களுக்கு  7 ம் இடத்து குரு (களத்திர குரு) – பலன் 100%
- அனைத்திலும் நல்ல பலன்களே நடக்கும். புதிய முயற்ச்சிகள் வெற்றியை தரும். விரும்பிய இடம் மாற்றம், பதவி உயர்வுடன் நல்ல சம்பளத்தோடு அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். வெளிநாட்டு வேலை மற்றும் கூட்டு தொழிலில் நன்மை உண்டாகும். புதிய சூழலில் வாழும் நிலை ஏற்படும்.
திருமணம் கைக்கூடி வரும். கணவன் மனைவியிடையே நல்ல புரிதல் இருக்கும். நண்பர்கள் மூலம் பல உதவிகள் கிடைக்கும். புதிய நட்பு வட்டாரங்கள் உருவாகும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும். தாராள பணப்புழக்கம் ஏற்படும். கடன் சுமைகள் குறையும். புதிய வீடு / மனை / நகைகள் வாங்கும் யோகம் ஏற்படும். குழந்தை பாக்கியம் உண்டாகும். புனித யாத்திரை சென்று வருவீர்கள். பூர்வ புண்ணிய சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு.
 
குரு பார்க்கும் இடங்கள்: 5 ம் பார்வையாக 11 ம் இடம் – செய்தொழில் / வேலையில் வருமானம் கணிசமாக உயரும். வழக்கு விவகாரங்கள் வெற்றியை தரும்.
7 ம் பார்வையாக உங்கள் ராசியை பார்ப்பதால் மனமும் உடலும் தெளிவு பெரும். எதிர்காலத்திற்குத் தேவையான விசயங்களைத் திறம்பட திட்டமிட்டு செவ்வனே முடிப்பீர்கள்.
9 ம் பார்வையாக 3 ம் இடம் – புதிய முயற்ச்சிகள் வெற்றி பெரும். உங்கள் புகழ் திக்கெங்கும் பரவும். வெற்றிகள்  பல குவியும்.
 
பரிகாரம்: மயிலை ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (கபாலீஸ்வரர் கோயில்) குரு பகவானை வழிபடவும்.
 
 
 
 
 
 

நேரம் : 12:17 PM