முகநூல் விருப்பம்

ஆன்மிகம்

மஹாளய பட்சமும் பித்ரு வழிபாடும் !

பதிவு நாள் September 17, 2016

 
 
Image result for திருப்பதி ஏழுமலையான்
 
 
 
பித்ருக்களின் ஆராதனைக்கு ”மஹாளயம்” என்று பெயர். புரட்டாசி மாதம், தேய்பிறை பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்து திதிகளே (நாட்களே) மஹாளய பட்சமாகும்.
எதிர் வரும் 17-9-2016 முதல் 1-10-2016 வரையுள்ள இருவாரங்கள் இவ் வருடம் மாஹாளய பட்ச காலமாக கணிக்கப்பெற்றுள்ளது.
 
இக் காலங்களில் நவராத்திரி விரதம் கும்பம் வைத்து செய்யப் பெறுவதால் அவை தவிர்ந்த மற்றைய நாட்களில் பித்ரு தர்பணமாக மஹளையம் செய்வது வழக்கமாக உள்ளது.
 
 
ஒரு வருடத்தை தேவ, ப்ரஹ்ம, பூத, பித்ரு, மநுஷ்ய என்னும் ஐந்து பாகங்களாக வகுத்து, புரட்டாதிமாதம் (மஹாளய பக்ஷம்) பித்ருக்களுக்கு உரிய மாதமாக கணிக்கப்பெற்றுள்ளது. எனவே அந்தக் காலத்தில் மஹாளய-பித்ரு வழிபாட்டுகள் செய்து பித்ருக்களை மகிழ்வித்து அவர்களின் ஆசிகளை பெறுகின்றோம்.
 
மனிதர்கள் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து என இந்து மதம் வலியுறுத்துகிறது. அவை பிதுர்யக்ஞம்(மூதாதையினர்), தேவரயக்ஞம்(தேவர்கள்), பூதயக்ஞம் (பசு, காக்கைக்கு உணவு அளிப்பது) மனித யக்ஞம் (சுற்றத்தார், பிச்சைக்காரர்கள், துறவிகள் ஆகியோருக்கு உணவு அளிப்பது), வேத சாஸ்திரங்களைப் பயில்வது ஆகியவை. இவற்றுள் பிதுர் யக்ஞம் மிகவும் புனிதமானது.


 
இறந்த எமது முன்னோர்களுக்காகச் செய்யப்படுவது பிதிர் வழிபாடு.
 
இந்த மஹாளயபட்ச தினங்களாகிய பதினைந்து நாட்களிலும் பித்ரு தேவதைகள் எம தர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு எங்கள் குடும்பத்தினருடன் தங்கி விடுவர் என்பர். எனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ (தர்ப்பணம்) அளிக்க வேண்டும் என்றார்கள்.
 
அவர்களும் அதன் மூலம் திருப்தியடைந்து, நமக்கு அருளாசி வழங்குகின்றனர். நோயற்ற வாழ்வினை வழங்குகிறார்கள். தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் (திதி) செய்யாதவர்கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும்.
 
தகுந்த குருமார்களை வைத்து முறைப்படி செய்ய முடியாதவர்கள், அரிசி, வாழைக்காய், தட்சிணை போன்றவற்றைக் கொடுத்தாவது பித்ருக்களை இந்த மஹாளயபட்சத்தில் திருப்தி செய்ய வேண்டும்.
 
சிறுகச் செய்தாலும், பித்ரு காரியங்களை மனப்பூர்வமாக சிரத்தையாகச் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
 
வசிஷ்ட மகரிஷி, தசரதர், யயாதி, துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், கார்த்தவீர்யார்சுனன், ஸ்ரீராமர், தர்மர் முதலானோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள்.
 
நமது வாழ்வில் வரும் இன்ப துன்பங்கள் யாவும் நாம் எமது முற்பிறப்பில் செய்த பாப புண்ணியத்துக்கு அமையவே நடைபெறும். அதிலே பிதிர் காரியமும் ஒன்றாகும். அதனை நாம் கிரமமாக சிரத்தையுடன் செய்ய வேண்டும். அது தவறின் பிதிர்களின் கோபத்துக்கு ஆளாவோம் என ஜோதிஷ சாஸ்திரம் கூறுகின்றது.
 
ஆகவே பிதிர் வழிபாடு மிக முக்கியமானது. அதிலும் மஹாளயஞ் செய்து பிதிர் வழிபாடு செய்து பிதிர் ஆசி, குரு ஆசி, தேவ ஆசி பெற்று வாழ்வது மிக மிக மேலானது. இதனை வீட்டில் செய்ய முடியாதோர் புரட்டாதி அமாவாசையில் புரோகிதருக்கு அரிசி, காய்கறி கொடுத்து மோக்ஷ அர்ச்சனை செய்யலாம்.
 
யாவரும் தவறாது மஹாளயம் செய்து பிதிர் ஆசி பெறுவோம்....
 
 
 
 
 
 
 
 
 

நேரம் : 07:41 PM

ஆன்மிகம்

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்