முகநூல் விருப்பம்

ஆன்மிகம்

சபரிமலை யாத்திரையின் சிறப்புகள் என்ன?

பதிவு நாள் November 18, 2015



 



 

 


சபரிமலை மிகச் சக்தி வாய்ந்த திருத்தலம்.

அங்கு திருமால், சிவன், சக்தி ஆகிய 3 பேரின் மொத்த அவதாரமான ஐயப்பன் குடிகொண்டுள்ளார்.

18 சித்தர்களைக் அடிப்படையாக வைத்தே அங்கு 18 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இருமுடி இல்லாமல் சுவாமியை தரிசனம் செய்வது கூடாது.



 

இருமுடியின் தத்துவமே தன் பாவத்தை தானே சுமப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான். தலையில் தூக்கி இருமுடியை வைத்ததுமே அவரது பாவங்கள், தவறுகள் எல்லாம் மனதிற்குள் வர வேண்டும். அதற்காக இறைவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் எழ வேண்டும்.



 

ஒரு மண்டலம் விரதம் இருந்து அதற்கு பின்னர் இறைவனை தரிசித்து மன்னித்தருள வேண்டினால் பலன் கிடைக்கும்.



 

ஐயப்பனுக்கு சாஸ்தா என்றொரு பெயரும் உண்டு.

 

சாஸ்தா என்றால் காவல் தெய்வம், வன தெய்வம், எல்லை தெய்வம் என்று பொருள். சனி தசை அல்லது காலகட்டம் நடைபெறும் போது எந்தக் கோயிலுக்கு சென்றும் பலன் கிடைக்கவில்லை என்றால் சாஸ்தா வழிபாட்டை மேற்கொள்வது நிச்சயம் பலனளிக்கும்.



 

காடு, மலைகளுக்கு உரிய கிரகம் சனி. எனவே ஐயப்பனை வழிபடச் செல்லும் போது காடு, மலைகள் வழியாக பயணிப்பதாலும், கடுமையாக விரதம் இருந்து வழிபடுவதாலும் அது பெரும் பரிகாரமாக கருதப்படும்.



 

அக்குப்பஞ்சர் போன்ற மருத்துவ முறைகளில் தலையில் உள்ள சக்தி மையங்களை இயக்கி நோய்களுக்கு சிகிச்சை அளிப்பர்.

 

முற்காலங்களில் தலையில் சுமை வைத்துச் தூக்கிச் செல்லும் வழக்கம் இருந்தது. ஆனால் தற்போது அதுபோன்ற பணிகள் ஏதும் இல்லாத காரணத்தால், கபாலத்தில் உள்ள சக்தி மையங்கள் இயக்கப்படாமல் தவிர்க்கப்படுகின்றன. எனவே, இருமுடியை தலையில் சுமப்பதால் உடல்நிலையும் மேன்மையடையும்.



 

ஐயப்பன் கோயில் வழிமுறைகள், நெறிமுறைகள் அனைத்தும் ஆழமான உள்அர்த்தங்களை உடையவை. இருமுடிவை தலையில் வைத்துக் கொண்டு வீட்டை விட்டுக் சபரிமலைக்கு புறப்படும் போது “போய் வருகிறேன்” என்று கூறிச் செல்ல மாட்டார்கள். இதற்கு என்ன அர்த்தம் என்றால் எல்லாம் இறைவன் செயல், எதுவேண்டுமானாலும் நடக்கலாம், இறைவனை நம்பியே அனைத்தும் உள்ளது என்பதால் சொல்லாமலேயே கிளம்ப வேண்டும்.



 

 

மனிதனுக்குள் ஈசன் இருக்கிறார் என்பதை உணர்த்துவதற்காகவே சாமிகள் இருமுடி அணிவதற்கு முன்பாக ஒருவர் மற்றவர் காலில் விழுந்து வணங்குவர். அதாவது உனக்குள்ளும் கடவுள் இருக்கிறார்... எனக்குள்ளும் கடவுள் இருக்கிறார். என்னை நீ வணங்கு, உன்னை நான் வணங்குகிறேன் என்பதே அதன் உள் அர்த்தம். காலில் விழும் சமயத்தில் வயது, அந்தஸ்து, ஜாதி, பணக்காரன்-ஏழை பாகுபாடு இவை அனைத்தும் அடிபட்டுவிடும். இது அனைவரும் சமம் என்ற நிலையை மனதளவில் உணர்த்திவிடும்.



 

 

சனியின் நிறம் கருப்பு என்பதால், பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் கருப்பு நிறத்தில் உடை உடுத்துகின்றனர். சிகை மழிக்காமல் இயற்கையான முறையில் வாழ்வதும் சனியின் வெளிப்பாடுதான்.



 

ஐயப்பனுக்காக விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள், அந்தக் காலத்தில் தங்கள் பலம் என்ன, பலவீனம் என்பதை உணர்ந்து விடுவர். ஏதோ சபரிமலைக்கு சென்றோம், காடு, மலைகளை சுற்றிப்பார்த்தோம், ஆற்றில் குளித்தோம், ஐயப்பனை தரிசித்தோம் என்று இல்லாமல், அவர்களைப் பற்றி அவர்கள் உணர்ந்து கொள்ளவே இந்த விரதம் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்கான நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.



 

 

இதேபோல் விந்தணுக்களை வெளிப்படுத்தாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறுவதற்கு ஒரு காரணம் உண்டு. சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க காடு, மலைகளை கடக்கத் தேவையான சக்தியை இந்த விரத காலத்தில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அந்த நடைமுறை உருவாக்கப்பட்டது.



 

 

ஐயப்ப சாமிகள் குளிர்ந்த நீரில்தான் குளிக்க வேண்டும் என்று கூறுவது, சபரிமலையில் நிலவும் தட்பவெப்பத்திற்கு ஏற்ப உடலை பக்குவப்படுத்திக் கொள்வதற்காகவே. காலை, மாலை 2 வேளையும் குளிர்ந்த நீரில் குளிப்பதால், குளிரை சமாளிக்கும் திறன் கிடைப்பதுடன், காமமும் கட்டுப்படுத்தப்படும். இதனால் ஒரே விஷயத்தில் இரு பலன்கள் கிடைக்கும்.



 

 

குளிர்ந்த நீரில் குளிப்பதால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்காக ஐயப்ப சாமிகளுக்கு சுக்கு கஷாயம் கொடுப்பார்கள். அது சளி பிடிப்பதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக வழங்கப்படுகிறது.

 

 

 

 

நேரம் : 08:39 PM

ஆன்மிகம்

அண்மைய செய்திகள் பெற

பார்வை

 

தற்போதைய பார்வையாளர்கள்